Thursday, October 18, 2012

Abhayahastha mahimai

~Ravichandran Sowrirajan

 எம்பெருமானைக் குறித்து சேதனன் ஒரு அஞ்சலி செய்தால் சேதனனை நோக்கி எம்பெருமான் ‘அஞ்சல்’ செய்கிறான். அஞ்சல் என்றால் பயப்படாதே என்று பொருள். வலது திருக்கரம் பயப்படாதே என்று அடியார்களுக்கு அபயம் கொடுப்பதால் அபயஹஸ்தமென்று அத்திருக்கரத்துக்குப் பெயர். அபயமுத்திரையென்று அந்த அடையாளத்திற்குப் பெயர். அபயமுத்திரதமான பெருமாள் திருக்கையைப் பலவிடங்களில் ஸ்வாமி தேசிகன் அனுபவிக்கிறார். க்ஷணந்தோறும் கோடிக்கணக்கான பாபங்களைப் புரிந்துவரும் பேர்களுக்குப் பெருமாளை அணுகுவதென்றால் உள்ளத்தில் எத்தனை பயம் ஏற்படுகிறது? அந்த பயத்தைப் போக்காவிடில் பகவத் ஸந்நிதியில் போய் நிற்பதே முடியாதே! ஆகவே அபயஹஸ்தம் முதல்முதலாகப் புரியும் காரியம் அபராதத்தால் நமக்கு ஏற்படும் பயத்தைப் போக்குவதே. ‘நித்யாபராத சகிதே ஹ்ருதயே மதீயே, தத்தா பயம்ஸ்புரதி தக்ஷிணபாணிபத்மம்’ என்று தேவநாயக பஞ்சாசத்தில் திருக்கை வர்ணனை. இடைவிடாமல் செய்யும் பாபங்களினால் பயமடைந்த அடியேனுடைய ஹ்ருதயத்திற்கு அபயம் கொடுத்துக்கொண்டு விளங்கும் வலது திருக்கை மலர் – என்று இதற்குப் பொருள். இதனால் எம்பெருமானை அணுகத் துணிவு ஏற்பட்டு ‘நதர்ம நிஷ்டோஸ்மி’, ‘நோற்றநோன்பிலேன்’, ‘மனத்திலோர் தூய்மையில்லை’ முதலிய ஸ்தோத்திரங்களையும் பாசுரங்களையும் அனுஸந்தானம் செய்துகொண்டு அவனை சரணம் புக்கால் அபயஹஸ்தம் அப்பொழுது வேறு பொருள்கொண்டு விளங்கும். ‘நீ செய்த அபராதத்தால் உனக்கு வரவிருக்கும் தீங்குகளை யெல்லாம் விலக்கி உனக்கு அபயம் கொடுத்தேன். இனி அஞ்சேல்’ என்று வாய்ப்பேச்சில்லாத அந்த அழகிய கைப்பேச்சு நமக்கெல்லாம் வெகு ஆப்தம். முன்பு ஸமுத்திரதீரத்திலும், அர்ச்சுனன் தேர்த்தட்டிலும் பேசிய ‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி’, மாஸூச:’ என்ற வாக்கியங்களைப் பொருளாய்க் கொண்டு விளங்குகிறது அபய முத்திரை. ‘ஸர்வபூதேப்யோ ததாமி’ என்ற வாக்கியத்தில் தோன்றும் இரண்டு அர்த்தங்களையும் ‘அனைவர்க்கும் அனைவராலும் அஞ்சேல் என்றருள் கொடுப்பன்’ என்று ஸ்வாமி மொழிபெயர்த்துக் காட்டுகிறார் அபயப்ரதானஸாரத்தில். எல்லோருக்கும் ரக்ஷணம், எல்லோரிடமிருந்தும் ரக்ஷணம். பூவில் தோன்றிய பொற்கொடி பிடிக்கும்போது சிவந்துபோகும் மெல்லடிப்போதுகளுடன் பரம ஸுகுமாரமான திருமேனியுடையவராய், அழகு மிளிரும் இவரிடத்தில் இத்தனை ஆண்மையு முண்டோ என்று சங்கிப்போருக்கு அபயமுத்திரையில் அவநம்பிக்கை உண்டாகும். ‘ஸுகுமாரௌ மஹாபலௌ’ என்று ஒரேமூச்சில் பேசிய சூர்ப்பனகையின் அறிவுமிலாத பேர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவேண்டிப் பெருமாள் ஆயுதமேந்தி நிற்கிறார் என்று ஸ்வாமி தேசிகன் உத்ப்ரேக்ஷிக்கிறார். ‘நீலாசலோதித நிசாகர பாஸ்கராபே, சாந்தாஹிதே ஸுரபதே! தவசங்கசக்ரே, பாணேரமுஷ்ய பஜதாம் அபயப்ரதஸ்ய ப்ரபத்யாயநம் ஜகதி பாவயத ஸ்வ பூம்நா’(தேவநாயகபஞ்சாசத் 30)’ஓர் கோலநீல! நன்னெடுங் குன்றத்தை அணைந்து நின்ற சந்திராதித்யர்கள் போன்ற உமது சங்கமும் சக்ரமும் சத்ருக்களை நிரஸிப்பதில் நிகரற்ற தமது காந்தியாலே இந்த வலது கரத்தின் அபயப்ரதானத்தில் விச்வாஸத்தை(நம்பிக்கையை) ஜகத்துக்கு விளைவிக்கிறார்கள்’ என்று இதன் பொருள். இவ்வர்த்தத்தையே பன்னிருநாமத்தில் ‘அம்பொற்கரங்களில் ஐம்படைகொண்டு அஞ்சலென்றளிக்கும் செம்பொன் திருமதிள்சூழ் சிந்துராசலச் சேவகனே’ என்று ப்ரணாதார்த்திஹர வரதன் விஷயமாக அருளிச் செய்திருக்கிறார். இவன் சேவகத்தை சரணம் புகவந்த ஒரு குரங்கு பரீக்ஷித்து அங்கீகரிக்க வேண்டி வந்தது. பின்னர் இந்த ஸந்தேஹம் ஏற்படாவண்ணம் எப்பொழுதும் திருவாயுதங்களை ஏந்தியவண்ணம் இருப்போம் என்று ஸதா பஞ்சாயுதங்களை ஏந்திவருகிறார் போலும். மேலும் அர்ச்சாஸமாதியாகையால் பரீக்ஷிப்போரிஷ்டப்படி பரீக்ஷை கொடுக்க இயலாது போவதே! என்ற கவலையால் முன்கூட்டியே ஆயுதங்கள் தாங்கி அடியாரை நம்பும்படி செய்கிறான் ஆகவுமாம். ப்ரணத ரக்ஷணத்தில் விளம்பத்தை ஸஹிக்கமாட்டாதவராய் ஸதா பஞ்சாயுதங்களை ஏந்தியிருக்கிறார் பெரியபெருமாள் என்றருளிச் செய்தார் பட்டர். அணுகும் அடியார்க்கு விச்வாஸத்தை விளைவிக்க அவ்வாறு ஏந்தி நிற்கிறார் என்று ஸ்ரீதேசிகன் அருளிச் செயல். ஆயுதமேந்தி சபதம் செய்வதும் முறையாதலால் என் ஆயுதங்களின் மேலாணையாய் உன்னை ரக்ஷிக்கிறேன், நீ கவலையொழி என்று பொருள்படும் வண்ணம் ஆயுதங்களும் அபயமுத்திரையும் ஒருங்கே அமைந்தபடி. ‘ஸத்யம்தே ப்ரதிஜாநே’ என்று சொல்லும் திருவுள்ள மல்லவா அவனது! அபயமுத்திரைக்கு மூன்றாவது பொருள் ப்ரபத்தி ஸக்ருத் கர்த்தவ்யம் (ஒரே தடவை செய்யப்பட வேண்டியது) என்கிற சாஸ்த்ரார்த்தம். ‘உமதடிக ளடைகின்றே னென்றொருக்கால் உரைத்தவரை அமையும் இனி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து’ என்று அடைக்கலப்பத்தில் அருளிச் செய்யப்பட்டிருக்கிறது. ‘அமையும்’ என்பதற்குப் பொருள் ‘போதும்’ என்று. ‘ப்ராய:ப்ரபதனே பும்ஸாம்பௌந:பிந்யம் நிவாரயந், ஹஸ்த ஸ்ரீரங்க பர்த்துர்மாம் அவ்யாத் அபயமுச்ரித:’ என்கிற ந்யாஸ திலக ச்லோகத்திற்கும் இதுவே பொருள். தம்மேனி அழகை வாரி இறைக்கும் வள்ளலாகி அழகன் என்ற அஸாதாரண திருநாமம் பெற்ற திருமாலிருஞ்சோலை எம்பெருமான் தம் ஔதார்யத்தைக் காட்ட வரதான முத்திரையுடன் விளங்குகிறார். அவரிடம்போய் பெரியாழ்வார் ‘அக்கரையென்னும் அனத்தக்கடலுள் அழுந்தி உன் பேரருளால் இக்கரையேறி இளைத்திருந்தேனை அஞ்சேலென்று கைகவியாய்’ என்று ப்ரார்த்திக்கிறார். அபயமுத்திரையைப்போல நமக்கு ஆறுதல் அளிக்கவல்லது வேறில்லை என்பதை இப்பாசுரம் கொண்டு அனைவரும் உணரலாம். ஆகவே ஸ்வாமி தேசிகன் “அஞ்சலஞ்சலென்றளிக்க வேண்டும் அச்சுதா” என்று ப்ரார்த்திக்க நமக்கு போதித்திருக்கிறார்

No comments:

Post a Comment